மூடு

மீன்வளத்துறை

முன்னுரை

திருவாரூர் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகமானது அரசாணை எண். 58, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை நாள்: 27.04.2000-ன் படி நிறுவப்பட்டது. இவ்வலுவலகம் வாயிலாக உள்நாட்டு, கடல் மற்றும் உவர்நீர் மீன்வளத்திட்டங்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டமானது மீன்வளர்ப்பிற்கு உகந்த மற்றும் வளமான மாவட்டமாக விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில், மீன்வளமானது பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு, கடல் மற்றும் உவர்நீர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும் அரசானது மீனவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்தும் அளித்து வருகிறது. மீன் உற்பத்தியை வளங்குன்றா வகையில் பெருக்குவதும் மற்றும் மதிப்பூட்டிய மீன் உணவு மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இத்துறையின் நோக்கமாகும்.

கடல் மீன்வளம்

திருவாரூர் மாவட்டமானது 47.2 கி.மீ கடற்கரை நீளம் கொண்டு பாக்-ஜலசந்தியை உள்ளடக்கிய கடலோர மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்களில் 2911 மீனவக் குடும்பங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். மொத்த மீனவ மக்கள் தொகை 11439 ஆகும். இவற்றில் 5955 மீனவர்களும் மற்றும் 5484 மீனவ மகளிரும் உள்ளனர். இம்மாவட்டத்தில் 175 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

கடலோர கிராமங்கள்

கரையங்காடு,  கற்பகநாதர்குளம், கீழவாடியக்காடு, முனங்காடு, தொண்டியக்காடு, செங்காங்காடு,  ஜாம்புவானோடை, வீரன்வயல்,  உப்பூர்,  காரைத்திடல்,
ஆலங்காடு,  துறைக்காடு, பேட்டை

கடல் மீனவர்களுக்கு வழங்கப்படும் நல்வாழ்வு மற்றும் நிவாரணத்திட்டங்கள் அனைத்தும் மீனவ கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 4300 மீனவர்களை உறுப்பினராகக் கொண்டு 9 கடல் மீனவ கூட்டுறவு சங்கங்களும் மற்றும் 1700 கடல் மீனவ மகளிர் உறுப்பினர்களைக் கொண்டு 5 கடல் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகிறது.

கடல்மீனவர் கூட்டுறவு சங்கங்கள்

ஆலங்காடு,  துறைக்காடு,  ஜாம்புவானோடை,கற்பகநாதர்குளம், கீழவாடியக்காடு,  முனங்காடு,
செங்காங்காடு, தொண்டியக்காடு,  வடக்கு வெள்ளாத்திக்காடு.

கடல்மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள்

ஆலங்காடு,  சின்னாங்கொல்லை, முத்துப்பேட்டை,செங்காங்காடு,  வடக்கு வெள்ளாத்திக்காடு.

கீழ்க்கண்ட திட்டங்கள் கடல் மீனவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது

  • மீன்பிடி தடைக்கால நிவாரணத்திட்டம் (ரூ. 5,000/-
  • மீன்பிடி குறைந்த கால நிவாரணத்திட்டம் (ரூ, 5,000/-)
  • தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத்திட்டம் (ரூ. 4,500/-)
  • தமிழ்நாடு மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத்திட்டம் (ரூ. 4,500/-)
  • மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டம் (ரூ. 2,00,000/-)
  • மீனவர்/ மீனவ மகளிருக்கு உயிர் வழி அடையாள அட்டை (Bio-Metric ID) வழங்குதல்

உள்நாட்டு மீன்வளம்

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சத்தான உணவினை வழங்குவதில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற மக்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருவதில் உள்நாட்டு மீன்வளர்ப்பு முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்தில், திருவாரூர் மாவட்டமானது அதிக வளம் கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் ஆற்று மீன்வளத்திற்கு முக்கிய வளமாக உள்ளது. இம்மாவட்டத்தில் இந்திய பெருங்கெண்டை மீனினங்கள் மற்றும் சீன மீனினங்கள் மீன்வளர்ப்பு விவசாயிகளால் வளர்க்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 4 மீன்குஞ்சு உற்பத்தி மையங்கள், 30 மீன்குஞ்சு வளர்த்தெடுக்கும் மையங்கள் மற்றும் 950 ஹெக்டேர் பரப்பளவில் 650 மீன் வளர்ப்பு பண்ணைகள் மீன் உற்பத்திக்கு உதவுகிறது. இவ்வலுவலக கட்டுப்பாட்டில் மன்னார்குடி வட்டம், நல்லிக்கோட்டை கிராமத்தில் அரசு மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் மற்றும் வளர்த்தெடுக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை (DFFDA)

கிராமப்புறங்களில் மீன்வளர்ப்பினை ஊக்குவிக்கவும் மற்றும் வேலைவாய்ப்பினை பெருக்கவும், நன்னீர் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை (FFDA) மற்றும் உவர்நீர் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை (BFDA) இணைந்து மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை (DFFDA) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தொழில்நுட்ப உதவிகள், மானிய உதவிகள் மற்றும் பயிற்சிகள் ஆகியன மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை, மாவட்ட ஆட்சியரை பெருந்தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மீன்வளர்ப்பு, மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் இறால் வளர்ப்பு விவசாயிகள் இதில் உறுப்பினர்கள் ஆவார்கள்.

உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள்

உள்நாட்டில் மீன்பிடித்தல் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வரும் மீனவர்களை உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக சேர்த்து நிவாரணத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அரசுடைமையாக்கப்பட்ட நீர் நிலைகளின் மீன்பாசிக் குத்தகை உரிமத்தினை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 3540 உறுப்பினர்களைக் கொண்டு 6 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள்

குடவாசல், மன்னார்குடி,  நன்னிலம்,  நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான்.

உள்நாட்டு மீனவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் விபரம்:
மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ்

  • 50% மானியத்தில் புதிய மீன்பண்ணை அமைத்தல் – ரூ. 3.50 இலட்சம் / ஹெக்டேர்
  • 50% மானியத்தில் மீன்பண்ணை புனரமைத்தல் – ரூ. 1.75 இலட்சம் / ஹெக்டேர்
  • 50% மானியத்தில் உள்ளீட்டு மானியம் – ரூ. 0.75 இலட்சம் / ஹெக்டேர்

உவர்நீர் மீன்வளம்

உவர்நீர் மீன்வளர்ப்பானது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சத்தான உணவு, வேலைவாய்ப்பினை உருவாக்குவதிலும் மற்றும் ஏற்றுமதியிலும் முக்கிய பங்காற்றுகிறது. இம்மாவட்டமானது அதிக அளவில் உவர்நீர் வளங்களை கொண்டுள்ளது. உவர்நீர் இறால் பண்ணைகள் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் (Coastal Aquaculture Authority) கடலோர நீழ்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் சட்டம் 2005-ன் படி பதிவு செய்யப்பட்டு இறால் வளர்ப்பு நெறிமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 154 உவர்நீர் இறால் பண்ணைகள் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீனவர் நலவாரியம்

மீனவர்கள், மீன்பிடி மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில் மேற்கொள்பவர்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு மீனவர் நலவாரியம் தொடங்கப்பட்டு சென்னையினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நிவாரணத்தொகை அனைத்தும் மீனவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மின்னனு பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இயற்சை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, மீனவர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு மற்றும் கருச்சிதைவு ஆகியவற்றிற்கு நிதிப்பயன் வழங்கப்பட்டு வருகிறது.

மீன்துறை உதவி இயக்குநர்

மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலம்,

அறை எண். 210-213, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்,
திருவாரூர் – 610 004.
தொலைபேசி எண்:04366 – 224140