மூடு

வரலாறு

திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் ஐந்து பாரம்பிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படுகிறது. இப்பெயர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தினைக் குறிப்பதாகும். காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் இம்மாவட்டம், நெல் வயல் வெளிகளினாலும், உயர்ந்த தென்னைமரங்களினாலும், பசுமையான தாவரங்களினாலும் செழிப்புடன் திகழ்கிறது. தலைக்காவிரி என அழைக்கப்படும் காவிரி நதி மற்றும் அதன் கிளை நதிகள் நிலத்தினை வளப்படுத்துகின்றன.

7, 8ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சைவக்குரவர்களான திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இயற்றிய தேவாரத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பாடல்பெற்ற தலமாக திருவாரூர் அமைந்துள்ளது. மார்கழி ஆதிரை விழா, பங்குனி உத்திரப்பெருநாள், வீதிவிடங்கனுக்கு நீதி செய்த முறை ஆகியவற்றை இப்பாடல்களின் மூலம் அறியலாம். இக்கோயில் 9ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்ய சோழனால் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதன்பின்னர், முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் புனரமைக்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.

முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் திருவாரூர் தலைநகராமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்ததாக இக்கோயில் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். 13ஆம் நூற்றாண்டில், இரண்டாம் இராஜேந்திரசோழர் காலத்தில், சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாண்டியர்கள் மற்றும் ஹோய்சாலர்கள் ஆதிக்கத்தில் இம்மாவட்டம் இருந்துள்ளது. நாயக்கர்கள், விஜயநகர அரசுகள், மராத்தியர்கள் காலத்திலும் தொடர்ந்த அரசின் ஆதரவு காரணமாக இம்மாவட்டம் கலாச்சார மையமாக திகழ்ந்துள்ளது. மராத்தியரின் ஆட்சிக்காலத்தில் சிதம்பரம் நடராஜரின் தற்காலிக வீடாகவே திருவாரூர் இருந்துள்ளது. 1759இல் ல்ல்லியின் கீழ் செயல்பட்ட பிரெஞச்சுபடைகள் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை தேடி சூறையாடினர். அப்போது கோயிலைச் சேர்ந்த 5 அந்தணர்கள், ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்க்கிறார்கள் என சந்தேகிகப்பட்டு கொல்லப்பட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக 1991 வரையிலும், பின்னர் 1997க்குப் பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. வரலாற்று ரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது. திருவிழிமிழலை, திருப்பாம்புரம், திருமீயச்சூர், திருவாஞ்சியம், தில்லைவிளாகம், திருக்கண்ணமங்கை போன்ற வரலாற்றில் பிரபலமான கோவில்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையில் பழமையும், புகழும் மிக்க தர்கா அமைந்துள்ளது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் இம்மாவட்டத்திற்கு புகழையும், கண்ணியத்தையும் சேர்க்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மைத் தொழில் முதன்மைத் தொழிலாக உள்ளது. 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இம்மாவட்டத்தின் முதன்மைச் சாகுபடிப் பயிர் நெற்பயிராகும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை நிரப்புவதில் இம்மாவட்டம் முக்கியப்பங்கு வகிக்கிறது. தலைக்காவிரி மற்றும் அதன் கிளைநதிகள் பாசனத்திற்கு அளிக்கும் வண்டல் மண் வளத்தால் வேளாண்மையில் முக்கிய இடத்தை பெறுகிறது.

இம்மாவட்டத்தின் இயற்கை அழகிற்கு முத்துப்பேட்டையில் அமைந்துள்ள மாங்குரோவ் காடுகள் காரணமாகிறன்றன. 1937 பிப்ரவரி மாதத்தில் முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக சென்னை மாகாண அரசினால் அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு வனத்துறை இதனைப் பாதுகாத்து பராமரித்து வருகிறது.
வருவாய்த்துறை அரசாணை (நிலை) எண்.681, நாள் 25.7.1996இன்படி 01.01.1997முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, பிரிப்பதற்கு முந்தைய நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியம் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும் 8 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும் 573 வருவாய்க்கிராமங்களையும் கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது.