மூடு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இணையதளம் மூலமாக, படிப்பை முடித்து வரும் ஆண் பெண் மனுதாரர்களுக்கு கல்வித் தகுதிகளை புதிதாக பதிவு செய்தல், ஏற்கெனவே இவ்வலுவலகதில் பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிகளை பதிவு செய்தல், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்தல் செய்தல், அரசால் அளிக்கப்படும் முன்னுரிமைச் சான்றுகளை சரிபார்த்து பதிவு செய்தல், வேலையளிப்போரால் அறிவிக்கப்படும் காலியிட அறிவிப்புகளுக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து பாரிந்துரை செய்தல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனுதார‌ர்களின் விருப்பத்திற்கிணங்க பதிவட்டையினை இம்மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இணையதளம் மூலமாக பதிவு மாற்றம் செய்தல், பிற மாவட்டத்திலிருந்து இம்மாவட்டத்திற்கு பதிவு மாற்றம் செய்யப்படும் பதிவட்டைகளை பெற்று மறு பதிவு செய்தல், போன்ற பணிகள் செவ்வனே நடைபெற்று வருகிறது. 31.12.2017 தேதியில் 63,024 ஆண் மனுதாரர்களும் 76,839 பெண் மனுதாரர்களும் ஆக மொத்தம் 13,98,863 மனுதாரர்கள் பதிவு செய்து வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றார்கள்.

ஓவ்வொரு நாளும் பல்வேறு பணிகளுக்காக அலுவலகம் வரும் மனுதாரர்கள் பயனடையும் பொருட்டு திறன் பயிற்சி, போட்டித்தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு குறித்து ஊக்கப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் குழு விவாதங்கள் தனிநபர் தகவல் அளித்தல் மற்றும் பதிவு மூப்பில் முதியவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய மாநில அரசால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளுக்கு கல்லூரி பேராசிரியர்கள், துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணிபரிந்து வரும் வெற்றியாளர்களை கொண்டு தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்களுக்கு அவ்வப்போது ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அச்சமின்றி தேர்வினை எதிர் கொள்ளும் வகையில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் ஒவ்வொரு தேர்வுக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள்.

தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டித்தேர்விற்கான புத்தகங்கள் வாங்கி நூலகத்தில் பராமாரிக்கப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு அவ்வப்போது சென்று தொழில் நெறி வழிகாட்டும் பேச்சு மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களுடன், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வழிகாட்டுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தல், போட்டித் தேர்வு எழுதுதல், சுயதொழில் செய்தல், தொழில்முனைவோர் ஆவது எப்படி என்ற பல்வேறு தலைப்புகளில் வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இவ்வலுவலகத்தில் திறன் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக படித்த, படிக்காத 40 வயதிற்குட்பட்ட மனுதாரர்கள் பயனடையும் பொருட்டு குறுகிய கால திறன் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மனுதாரர்கள் விருப்பத்திற்கிணங்க 16-க்கும் மேற்பட்ட குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் மனுதாரர்களுக்கு போக்குவரத்து செலவிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- வீதம் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்குவதுடன் தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகைதரும் மனுதாரர்களுக்கு சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள வேலைவாய்ப்பற்ற மனுதாரர்களை தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மற்றும் முன்னோடி வங்கி மூலம் கடன் உதவி பெற்று சுய தொழில் துவங்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை தமிழ்நாட்டிலுள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட தொழில் முனைவோர்களை தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, தனியார் துறைகளில் மனுதாரர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகிறார்கள்.அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் அயல்நாடு சென்று பணிபுரிய விரும்பும் மனுதாரர்களுக்கு பதிவு குறித்து விளக்கமும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, பணி கிடைக்க வழி வகை செய்யப்பட்டு வருகிறது.

வேலை நிலவரத்தகவல் பிரிவு

(Employment Market Information)

வேலை நிலவரத்தகவல் பிரிவு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கட்டாய காலியிட அறிவிப்புச்சட்டம் 1959-ன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மத்திய அரசு, மாநில அரசு அலுவலகங்கள் தனியார் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆண், பெண் எண்ணிக்கை விவரங்களை சேகரித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தால் அரசுக்கு புள்ளி விவரம் அனுப்பப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைப்பிரிவு

படித்துவிட்டு வேலைவாய்ப்பிற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்து காத்திருக்கும் மனுதாரர்களுக்கு தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்‌கு மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு பெற்றிருக்க வேண்டும். பதிவைத் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. மனுதாரர்களது பெற்றோர் அரசுப்பணியில் (மத்திய/மாநில) பணிபுரிபவராகவோ அல்லது ஓய்வூதியம் பெறும் அரசுப் பணியாளர்களாகவோ இருக்கக் கூடாது. மனுதாரர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

மனுதாரர்கள் உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். வி‌ண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்களது இருப்பிடத்தைச் சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் வருமானச் சான்று பெற வேண்டும். மனுதாரர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஏதாவது ஒன்றில் மனுதாரரது பெயரில் கணக்கு துவங்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மனுதாரர்கள் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தால் விண்ணப்பம் சமர்ப்பிக்கபட்டு உதவித்தொகை வழங்குவதற்கான ஒப்பளிப்பு செய்யப்படும். தொடந்து மூன்றாண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.

உதவித்தொகை பெறும் மனுதரார்கள் தாம் “வேலையில் இல்லை” என்பதற்கான சுயஉறுதிமொழி ஆவணத்தை வருடத்திற்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெறும் காலத்தில் மனுதாரர்களுக்கு அரசுப்பணி கிடைத்தாலோ, பதிவைப் புதுப்பிக்காவிட்டாலோ அல்லது சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காவிட்டாலோ அவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். மேலும் உதவித்தொகை பெறும் காலத்தில் மனுதாரர்கள் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருத்தல் கூடாது. இருப்பினும் அஞ்சல் மூலம் (Correspondence Course) பயில்பவராக இருக்கலாம்.

மனுதாரர்கள் அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த ஒரு பதவியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில் இல்லாதவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி வாரியான உதவித்தொகை விவரம்

வ.எண் கல்வித்தகுதி மாதமொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ
1 SSLC தேர்ச்சி பெறாதவர்கள் 200/-
2 SSLC தேர்ச்சி பெற்றவர்கள் 300/-
3 மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் 400/-
4 பட்டதாரிகள் 600/-

வயது வரம்பு

வ.எண் இனம் பொதுப்பிரிவினர்
 1 தாழ்த்தப்பட்டவர்கள் / பழங்குடியினர்
இதர வகுப்பினர்
45 வயதிற்குள் இருக்க வேண்டும்
2 (MBC/BC/OC) 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம்

மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தாம் ஒரு மாற்றுத்திறனாளி என்பதற்கான முன்னுரிமைச்சான்றினை பதிவு செய்திருக்க வேண்டும். இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. இவர்களுக்கு உச்ச வயது வரம்பு மற்றும் வருமான உச்ச வரம்பு ஆகியவை இல்லை. எனவே, வருமானச்சான்று பெறவேண்டியதில்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு உதவித்தொகை பெறும் காலத்தில் அரசுப்பணி; கிடைத்துவிட்டால் உதவித்தொகை நிறுத்தப்படும். மேலும், உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக்கூடாது. எனினும், அஞ்சல்வழி மூலம் (Correspondence Course) பயில்பவராக இருக்கலாம்.

கல்வித்தகுதி வாரியான உதவித்தொகை விபரம்

வ.எண் கல்வித்தகுதி மாதமொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ
1 SSLC தேர்ச்சி பெற்றவர்கள் /பெறாதவர்கள் (Upto SSLC) 600/-
2 மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் 750/-
3 பட்டதாரிகள் 1000/-

இத்தொகைக்கான பட்டியல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (காலாண்டுக்கு முறை தயார் செய்யப்பட்டு கருவூலத்திற்கு அனுப்பப்பட்டு ECS மூலம் மனுதாரர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

திருவாரூர்