தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம்
திருவாரூா் விற்பனைக் குழு
இலக்கு:
வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனையை முறைப்படுத்தி, வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு விற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி, அதனை முறையாக நிர்வகித்தல்.
குறிக்கோள்:
விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்கு, சரியான மற்றும் லாபகரமான விலைக் கிடைத்தலை உறுதி செய்தல்.
தமிழ்நாட்டில், மேற்காணும் இலக்கினையும், குறிக்கோளையும் செயல்படுத்த 23 விற்பனைக் குழுக்கள் உள்ளன.
நமது திருவாரூா் மாவட்டத்தில், இப்பணி திருவாரூா் விற்பனைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, 1962 முதல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் பகுதியாகவும், 4.1.2003 முதல் தனி விற்பனைக் குழுவாகவும் திருவாரூா் விற்பனைக் குழு இப்பணியினை செவ்வனே செய்து வருகிறது.
திருவாரூா் விற்பனைக் குழு, திருவாரூா் மாவட்டத்தினை தனது அறிவிக்கையிடப்பட்ட பகுதியாகக் கொண்டுள்ளது.
திருவாரூா் விற்பனைக் குழுவின் கீழ் 8 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள், ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய அறிவிக்கையிடப்பட்ட விற்பனைப் பகுதியோடு செயல்பட்டு வருகின்றன.
திருவாரூா் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்
- திருவாரூா்
- மன்னார்குடி
- திருத்துறைப்பூண்டி
- வலங்கைமான்
- பூந்தோட்டம்
- வடுவூர்
- குடவாசல்
- கொரடாச்சேரி
திருவாரூா் விற்பனைக் குழுவின் அறிவிக்கையிடப்பட்ட பகுதியான திருவாரூா் மாவட்டத்தில் 14 வேளாண் விளைபொருட்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன- அவைகள்
- நெல்,பருத்தி,தேங்காய்,உளுந்து,பச்சைப்பயறு,மணிலா,எள்,துவரை,சிவப்பு மிளகாய்,சோளம்,
மக்காச்சோளம்,கரும்பு வெல்லம்,முந்திரி மற்றும் புகையிலை
திருவாரூா் விற்பனைக் குழுவின் செயல்பாடுகள்
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாக வேளாண் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலைக் கிடைக்கச் செய்தல்.
- வேளாண் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாக விற்க வசதி செய்தல்.
- விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள தரம்பிரிப்பு, சேமிப்பு வசதிகளை பயன்படுத்தி அவா்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலைக் கிடைக்க வசதி செய்தல் மற்றும் தரம்பிரிப்பு மற்றும் சேமிப்பின் பயன்களை ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்தல் மற்றம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, இடைத்தரகா் மற்றும் தரகு கட்டணங்கள் இன்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து, அதிகபட்ச விலை பெற்று பயனடைவதற்காக, விவசாயிகளுக்கும், வணிகா்களுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செய்யப்பட்டுள்ளன. இவ்வசதிகள் மற்றும் சேவைகள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. வணிகா்களிடம் மொத்த கொள்முதல் மதிப்பில் 1% கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள வசதிகள்
- பரிவா்த்தனைக் கூடம்
- எடையிடும் தராசுகள் / கருவிகள்
- குறைந்த வாடகையில் கிடங்கு வசதிகள்
- வேளாண் விளைபொருட்களை மறைமுக மற்றும் திறந்த ஏலம் மூலம் விற்பனை செய்ய [திருவாரூா் மாவட்டத்தில் பருத்தி மறைமுக ஏலம்] வசதிகள்.
விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடன்
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்து வருகின்றனா். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அன்றைய தினம் விற்பனை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது கட்டுபடியாகும் விலை கிடைக்காவிடிலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலுள்ள கிடங்குகளில் 15 தினங்களுக்கு கட்டணமின்றி இருப்பு வைத்துக் கொள்ளலாம். 15 தினங்களுக்குள் கட்டுப்படியான விலை கிடைக்கப் பெறாவிட்டால், தங்கள் விளைபொருளினை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அதிகபட்சம் 180 நாட்கள் இருப்பு வைத்து, விளைபொருளின் மதிப்பில் 50% வரை கடனாக (அதிகபட்சமாக 3 லட்சம்) பெறலாம். இருப்பு வைக்கப்படும் நாட்களில் முதல் 15 தினங்களுக்கு வட்டி கிடையாது, 15 தினங்களுக்கு மேல் இருப்பு வைக்கப்படும் நாட்களுக்கு 5% வட்டி கடன் தொகைக்கு வசூலிக்கப்படும். விவசாயிகள் தங்கள் விளைபொருளினை 180 நாட்களுக்குள் விலை அதிகமாக உள்ள பொழுது விற்று பயன்பெறலாம். இதன் மூலம் அறுவடைக் காலங்களில் குறைவான விலைக்கு விவசாயிகள் தங்கள் விளைபொருளை விற்பனை செய்வது தவிர்க்கப்படுகிறது.
இருப்பு வைப்பவா் தான் இருப்பு வைக்கும் விளைபொருள் அவா் விவசாயம் செய்த நிலத்தில் இருந்து பெறப்பட்டது என உரிய ஆதார சான்றுகள் சமா்ப்பிக்க வேண்டும்.
வணிகா்களுக்கான பொருளீட்டுக் கடன்
வணிகா்கள் கொள்முதல் செய்யும் விளைபொருளினை குறைந்த வாடகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் கிட்டங்கிகளின் வைத்து பயன்பெறலாம். அவா்களும் தாங்கள் கொள்முதல் செய்யும் விளைபொருளினை அதிகபட்சமாக 180 நாட்கள் வரை இருப்பு வைத்து, விளைபொருளின் மதிப்பில் 50% கடனாக (அதிக பட்சம் 2 லட்சம்) பெறலாம். வணிகா்களுக்கு 9% வட்டி கடன் தொகைக்கு வசூலிக்கப்படுகிறது.
சிறப்பு திட்டங்கள்
உழவா் நலத் திட்டம்
உழவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
பயன்கள்
விவசாயி அல்லது அவருடைய குடும்பத்தினா் கீழ்கண்ட பயன்களை பெறுவா்.
- ரூ. 1 லட்சம் விவசாயி விபத்திலோ அல்லது பாம்பு கடித்ததினாலோ இறப்பின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.
- ரூ. 75000 விவசாயி இரண்டு கால்களையோ அல்லது இரண்டு கைகளையோ அல்லது இரண்டு கண்களையோ இழந்திருப்பின் வழங்கப்படும்.
- ரூ. 50000 விவசாயி ஒரு கையோ அல்லது ஒரு காலையோ அல்லது ஒரு கண்ணையோ இழந்திருப்பின் வழங்கப்படும்.
தகுதி:
வருடத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாக 1 மெட்ரிக் டன் விற்பனை செய்யும் விவசாயி.
தொடர்பு | தொடர்பு |
---|---|
செயலாளர், திருவாரூா் விற்பனைக்குழு, 172, பெரிய மில்தெரு, விஜயபுரம், திருவாரூா் – 610 001தொலைபேசி எண்: 04366 250481 |
தனி அலுவலர், திருவாரூா் விற்பனைக்குழு, 172, பெரிய மில்தெரு, விஜயபுரம், திருவாரூா் – 610 001தொலைபேசி எண்: 04366 250481 |
கண்காணிப்பாளர் / மேற்பார்வையாளர்,
ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்,
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர், வலங்கைமான், குடவாசல், பூந்தோட்டம் மற்றும் கொரடாச்சேரி.