மூடு

விழாக்கள், கலாச்சாரமும் பாரம்பரியமும்

தேர்த்திருவிழா

இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133-50) 56 விதமான சடங்குகளைக் கொண்டதாக கோயிலை விரிவுபடுத்தினார். அவற்றுள் சிலசடங்குகள் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதத்தில் தேர்த்திருவிழா கொண்டாடப்படும், இது தமிழ்மாதமான சித்திரை மாதத்தில் வருகிறது. திருவாரூர் ஆழித்தேரானது 90 அடி உயரமும், 300 டன் எடையுடன் இந்தியாவிலேயே, ஆசியக்கண்டத்திலேயே பெரிய தேராக விளங்குகிறது. ஆழித்தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். தேரோட்டத்தினைத் தொடர்ந்து தெப்பத்திருவிழா நடக்கிறது.

http://www.thiyagarajaswamytemple.tnhrce.in/index.html

சனவரி திங்களில் எண்கண், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

வலங்கைமான், பேட்டை மகா மாரியம்மன் கோவிலில், தமிழ்மாதமான ஆவணி (Aug-Sep) மற்றும் பங்குனி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

கூத்தனூர், அருள்மிகு மகா சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வழிபாட்டு, வரலாற்று மற்றும் தொன்மைவாய்ந்த இடங்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகளையும், பக்தர்களையும் கவரும் வண்ணம் ஏராளமான சுற்றுலா இடங்களையும், பக்தி தலங்களையும் கொண்டுள்ள மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது. இவற்றின் வரலாற்று முக்கியத்துவம், எழில்வாய்ந்த கட்டமைப்புகள், சூழல் மண்டலங்களை உள்ளடக்கிய தன்மையே பயணிகளை கவருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் பின்வருமாறு:

திருவாரூர் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலிருந்து 290 கி.மீ. தொலைவில் உள்ளது. இது நாகப்பட்டினம் (24 கி.மீ.) மற்றும் தஞ்சாவூர் (56 கி.மீ.) ஆகியவற்றிற்கிடையே அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் பசுமையான நெல் உற்பத்திக்கும், விண்ணைத்தொடும் கோபுரங்களைக் கொண்ட கோயில்களுக்கும் புகழ்பெற்றதாகும். தமிழ்நாட்டின் தென்கிழக்குப்பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. திருவாரூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதியாகராஜர் கோயில் பல சிறப்புகளை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் மிகப்பெரிய தேராகும். பெரிய கமலாலய குளமும், பொன் போன்று ஜொலிக்கும் அதன் மேற்பரப்பு நீரும் நகரின் அழகிற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோயில், எண்கண் ஸ்ரீசுப்ரமண்யசுவாமி திருக்கோயில், கூத்தனூர், அருள்மிகு மகா சரஸ்வதி அம்மன் கோவில், நவக்கிரக தலங்களில் ஒன்றான ஆலங்குடி, குரு கோவில் ஆகியவை மாவட்டத்தின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களாகும்.

முத்துபேட்டையில் அமைந்துள்ள மாங்குரோவ் காடுகள் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. சாலைகள், கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றின் இருமருங்கிலும் பரந்து விரிந்த வயல்வெளிகள் மாவட்டத்தின் வளத்தினை பறைசாற்றுகின்றன. உதயமார்த்தாண்டபுரம் மற்றும் வடுவூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயங்கள் சுற்றுலாப்பயணியர்களை கவரும் அற்புதமான இடங்களாகும்.

திருவீழிமிழலை, திருப்பாம்புரம், திருமெய்ச்சூர், திருவாஞ்சியம், தில்லைவிளாகம், திருக்கண்ணமங்கை ஆகிய இடங்கள் பழமையான கோவில்களை கொண்ட மாவட்டத்திலுள்ள பிற சுற்றுலாத்தலங்கள் ஆகும். முத்துப்பேட்டைக்கு அருகிலுள்ள ஜாம்புவனோடையில் பழமையானதும், புகழ்பெற்றதுமான தர்கா உள்ளது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் இம்மாவட்டத்திற்கு புகழையும், கண்ணியத்தையும் சேர்க்கிறார்கள்.

திருவாரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் கோயில் பல சிறப்புகளை உள்ளடக்கியது. இது சிவபெருமானின் சப்தவிடங்கத் தலங்களில் தலையானதும், புகழ்மிக்கதுமாகும். இத்திருக்கோவிலில், மனுநீதிச்சோழன் நீதி வழங்கிய முறையைச் சிறப்பித்துச் சித்தரிக்கும் வகையில், கலைக்கூடம் அமைந்துள்ளது. கமலாலயக் குளத்தின் நடுவே உள்ள சிறிய அளவிலான கோவிலில் இறைவன் அருள்பாலிக்கிறார். கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதியாகும். இந்நகரத்தின் பெருமை தேவாரத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. பழமையும் சிறப்பும் மிக்க பாரி நாதஸ்வரம், பஞ்சமுக வாத்யம் ஆகிய இசைக்கருவிகள் இன்றளவும் இசைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கர்நாடக இசை விழாக்கள் சுற்றுலாப்பயணிகளை கவருகின்றன. நகரத்தில் 10 பூங்காக்கள் அமைந்துள்ளன. அவற்றுள், பனகல் சாலையில் அமைந்துள்ள சோமசுந்தரம் பூங்காவும், தென்றல் நகரில் அமைந்துள்ள நகராட்சி பூங்காவும் முக்கியமானவை.

வரலாற்றுரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமயக் குரவர் சுந்தரர், தேவாரத்தில் தான் திருவாரூரில் பிறந்த அனைத்து மக்களின் அடிமை என்று குறிப்பிட்டுள்ளார். 63 நாயன்மார்களில், கழற்சிங்க நாயனார் மற்றும் தண்டியடிகள் நாயனார் பிறந்த ஊர் திருவாரூர் ஆகும். 12ஆம் நூற்றாண்டில் சேக்கிழாரால் இயற்றப்பட்ட பெரியபுராணத்தில் திருவாரூரில் பிறந்த இவர்களைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜராஜ சோழன் காலத்தில், இத்திருக்கோவிலில் இசை மற்றும் நடனமாடும் கலைஞர்கள் குழு இருந்ததன் மூலம், கலையின் மையமாக திருவாரூர் திகழ்ந்ததை அறியலாம். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். முத்துசாமி தீட்சிதர் இங்குள்ள தெய்வங்களைப் பாடியுள்ளார். 17ஆம் நூற்றாண்டில், தஞ்சாவூரில் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை காரணமாக, தென்னிந்தியக் கலாச்சாரம் பெருமளவில் இங்கு புகுத்தப்பட்டதும், மராத்திய அரசர்களின் ஆதரவு காரணமாகவும் இசை மற்றும் நடனத்தில் இந்நகரம் முன்னோடியாக விளங்கியது. பஞ்சமுக வாத்யத்தின் ஐந்து முகங்களும் ஐந்து விதமான ஓசையை எழுப்பும். பஞ்சமுக வாத்யமும், பாரி நாதஸ்வரமும் திருவாரூரில் மட்டுமே காணப்படுகிறது.