மூடு

காணத்தக்க இடங்கள்

ஆலங்குடி

நவக்கிரகங்களில் ஒன்றான குருவிற்குரிய தலமாக இம்மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி விளங்குகிறது.  அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் குரு அமர்ந்து அருள்பாலிக்கிறார்.  கும்பகோணம்-வலங்கைமான் சாலையில் ஆலங்குடி அமைந்துள்ளது.  இது வலங்கைமானிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.  இந்து மத ஐதிகப்படி, அகத்தியர் மற்றும் ஆதிசங்கரர் வழிபட்ட தலமாகக் கூறப்படுகிறது.

கூத்தனூர்

திருவாரூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் கூத்தனூர் அமைந்துள்ளது.  அருள்மிகு மகா சரஸ்வதி அம்மன் கோவிலிக்கு புகழ்பெற்ற கூத்தனூர், பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது.  கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அம்மனுக்கு எனத் தனியாக தமிழ்நாட்டிலேயே கோவில் இருப்பது இங்கு மட்டும்தான்.  கவிச்சக்ரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோர் இங்கு அம்மனின் அருள் பெற்றவர்களே.  இங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மன்னார்குடி

மன்னார்குடி கோவில்

இங்குள்ள மக்கள் குறிப்பிடுவதிலிருந்து மன்னார்குடி கோவில்களையும், குளங்களையும் கொண்டது என அறிய முடிகிறது.  ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்று அழைக்கப்படுகிறது.  குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்று அறியப்படுகிறது.  மூர்த்தியினாலும், புனித தீர்த்தத்தினாலும் புகழ் பெற்றது இத்தலமாகும்.  இத்தலத்தின் ராஜகோபுரம் 154அடி உயரம் கொண்டது.  கோவிலினுள் 16 கோபுரங்களும், 7 மண்டபங்களும், 24 சன்னதிகளும்இ 18 விமானங்களும் உள்ளன.  இக்கோவிலில் ஆண்டுமுழுவதும் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

எண்கண்

திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில், முகுந்தனூருக்குத் வடக்கே 1 கி.மீ. தொலைவிலும், திருவாரூர்-கும்பகோணம் சாலையில், காப்பணாமங்கலத்திற்கு தெற்கே 3 கி.மீ. தொலைவிலும் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்அமைந்துள்ளது.  முதலாம் இராசராச சோழன் காலத்தில் தினசரி பூஜைக்காகவும், விழாக்களுக்காகவும் அறக்கொடை அளித்துள்ளான்.  அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் எண்கண் முருகனின் சிறப்புகளைப் போற்றிப் பாடியுள்ளார்.  மூலவரான ஆறுமுகப்பெருமான் சிற்பத்தின் எடை முழுவதையும், ஊன்றி இருக்கும் மயிலின் ஒற்றைக்கால் தாங்கி இருக்கிறது.  இது போன்ற சிற்பத்தைக் காண்பதரிது.  ஆண்டுதோறும் சனவரித் திங்களில் நடைபெறும் தைப்பூசத் திருநாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தைப்பூசத் திருவிழாவினை கொண்டாடுகின்றனர்.

வலங்கைமான்

வலங்கைமான், வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் கோவில் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  பாடைக்காவடி மாரியம்மன் என இங்குள்ள அம்மன் அழைக்கப்படுகிறது.  தமிழ்மாதமான ஆவணி (Aug-Sep) மற்றும் பங்குனி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

ஜாம்புவனோடை தர்கா

முத்துப்பேட்டை தர்கா

700 ஆண்டுகள் பழமையும், புகழையும் கொண்டு சிறப்புற்று விளங்குகிறது.  ஆண்டவர் சாகுல் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் இசுலாமிய சூபி ஞானி இசுலாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.  சாதி, சமய, மத வேறுபாடு இல்லாமல் பல்வேறு தரப்பினரும் தர்காவிற்கு வந்து செல்கின்றனர்.